இலங்கை கொழும்பு துறைமுகம்: 2025ல் பசுமை துறைமுகமாக மாற்ற திட்டம்
2025ஆம் ஆண்டுக்குள் கொழும்பு துறைமுகத்தை பசுமை துறைமுகமாக மாற்றும் பணிகளை துரிதப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, 2025ஆம் ஆண்டுக்குள் இந்த இலக்கை அடையத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
உலகின் பொருளாதார கோட்டையாக விளங்கும் சீன அரசாங்கம், கொழும்பு துறைமுகத்தில் இதற்கான அனைத்து தொழில்நுட்பங்களையும் வழங்க விருப்பம் தெரிவித்துள்ளது.
சீனாவின் ஷாங்காய் நகர போக்குவரத்து ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வாங் சியாவோ ஜீ தலைமையிலான குழுவினர், துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் ஏனைய அமைச்சு அதிகாரிகளுடன் ஜூலை 2ஆம் திகதி அமைச்சில் கலந்துரையாடியுள்ளனர்.
கலந்துரையாடலின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் கப்பல் போக்குவரத்தை பாதிக்கும் தடைகள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர். TEU மற்றும் பிற சரக்குகளை அனுப்புவதற்கு கொழும்பு துறைமுகத்தின் பயன்பாட்டை அதிகரிக்கவும் அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.