இலங்கையில் தலைமறைவாக உள்ள பிரித்தானிய பெண் தொடர்பில் வெளியான புதிய தகவல்
கடந்த வருடம் இலங்கையில் நடந்த காலிமுகத்திடல் போராட்டத்தின் போது வீடியோக்களை பகிர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரித்தானிய சமூக ஊடக பெண் ஒருவர், தான் இன்னும் இலங்கையில் தலைமறைவாக இருப்பதாக பிரித்தானிய இணையத்தளம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 13 மாதங்களாக தலைமறைவாக இருந்து நம்பிக்கை இழந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
35 வயதான Kayleigh Fraser, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை குடிவரவு அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார், அவரது தங்குமிடம் சோதனையிடப்பட்டது மற்றும் அதிகாரிகள் சட்டவிரோத விசாவில் நாட்டிற்குள் நுழைந்ததாகக் கூறி அவரது பாஸ்போர்ட்டைக் கைப்பற்றினர்.
போராட்டங்களின் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரத் தொடங்கிய பின்னர் அதிகாரிகள் அவரது வீட்டை சோதனையிட்டதாக கெய்லீ ஃப்ரேசர் கூறுகிறார்.
இந்நிலையில் அவரை நாட்டை விட்டு வெளியேற அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதிகாரிகள் பிறப்பித்த நாடு கடத்தல் உத்தரவை இலங்கை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
எவ்வாறாயினும், நாட்டின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்படும் அச்சத்தின் மத்தியில் இலங்கை அதிகாரிகளிடம் சரணடைய பயப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.