வட்டி விகிதத்தை குறைத்த இங்கிலாந்து வங்கி!
இங்கிலாந்து வங்கி தனது வட்டி விகிதத்தை 4%-லிருந்து 3.75% ஆகக் குறைத்துள்ளது. இது வீட்டுக்கடன் (Mortgage) வைத்திருப்பவர்களுக்கு ஒரு மிகப்பெரிய நற்செய்தியாக அமைந்துள்ளது.
பணவியல் கொள்கைக் குழு (MPC) உறுப்பினர்கள் இந்த குறைப்புக்கு ஆதரவாக 5-4 என்று வாக்களித்துள்ளனர்.
குறிப்பாக, 2026-க்குள் சுமார் 19 லட்சம் மக்கள் இதன் மூலம் பயனடைவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. வட்டி விகிதம் குறைந்தாலும், சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்குக் கிடைக்கும் லாபம் சற்று குறையக்கூடும்.
சேமிப்பாளர்கள் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும்.
வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள பணத்திற்கான சேமிப்பு வட்டி (Savings Rates) இனி குறையக்கூடும். எனவே, உங்கள் சேமிப்புகளைச் சரியான திட்டங்களில் முதலீடு செய்வது அவசியமாகும்.
எனினும், புதிய கடன் வாங்குபவர்களுக்கு இது ஒரு பொற்காலமாகப் பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து வங்கியின் அதிரடி வட்டி குறைப்புக்கான முடிவின் பின்னணியானது, கடந்த நவம்பர் மாதம் இங்கிலாந்தின் பணவீக்கம் 3.2% ஆகக் குறைந்ததைத் தொடர்ந்து, வட்டி விகிதத்தைக் குறைக்க நாணயக் கொள்கைக் குழு முடிவு செய்துள்ளது.
இது 2023 பிப்ரவரிக்குப் பிந்தைய மிகக் குறைந்த வட்டி விகிதமாகும். நாட்டில் அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பொருளாதார மந்தநிலையைச் சமாளிக்க, சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க இங்கிலாந்து வங்கி இந்த 0.25% குறைப்பை மேற்கொண்டுள்ளது.





