ரத்தக் களமாக மாறிய பங்களாதேஷ் – இந்துக்களை இலக்குவைத்து வன்முறை
பங்களாதேஷில் மாணவர் அரசியல் மீண்டும் ரத்தக் களமாக மாறியுள்ளது. முக்கிய மாணவர் இயக்கத் தலைவரான ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலைக்குப் பின்னர் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து, பல பகுதிகளில் கலவரங்கள் வெடித்துள்ளதால் பங்களாதேஷ் தற்போது கடும் பதற்றமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 12 ஆம் திகதி நடைபெற உள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு, டாக்கா-8 தொகுதியில் வேட்பாளராக களமிறங்கிய ஷெரீப் உஸ்மான் ஹாடி, ‘இன்கிலாப் மஞ்சா’ என்ற மாணவர் போராட்ட அமைப்பின் மூத்த தலைவராக இருந்தார்.
கடந்த ஆண்டு பங்களாதேஷ் அரசுக்கு எதிராக நடைபெற்ற மாணவர் போராட்டங்களில் முக்கிய பங்காற்றிய தலைவர்களில் ஒருவராகவும் அவர் அறியப்பட்டார்.
இந்த நிலையில், கடந்த 12 ஆம் திகதி டாக்காவில் பிரச்சாரத்தை தொடங்கிய ஹாடியை, முகமூடி அணிந்த மர்ம நபர்கள் தலையில் துப்பாகிச் சூடு நடத்தினர்.
இதன்போது படுகாயமடைந்த அவருக்கு டாக்காவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் உடல்நிலையில் முன்னேற்றம் இன்மையால், மேல்சிகிச்சைக்காக விமானம் மூலம் சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
ஹாடியின் மரண செய்தி வெளியானதைத் தொடர்ந்து, டாக்கா உள்ளிட்ட பங்களாதேஷின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி நடைபெற்ற இந்த போராட்டங்கள், சில இடங்களில் வன்முறையாக மாறின.
‘புரோதோம் அலோ’, ‘டெய்லி ஸ்டார்’ ஆகிய முன்னணி செய்தித் தாள் அலுவலகங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. மேலும், பங்களாதேஷில் உள்ள இந்திய துணைத் தூதரக அலுவலகம் மற்றும் இந்திய துணைத் தூதரின் வீடு மீது கல் வீச்சு தாக்குதலும் நடைபெற்றுள்ளது.
இந்தியாவுக்கு எதிராகவும், அவாமி லீக் கட்சிக்கும், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும் எதிராகவும் போராட்டக்காரர்கள் கடும் கோஷங்களை எழுப்பினர். நிலைமையை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர். அதே நேரத்தில், அவாமி லீக் கட்சிக்கு சொந்தமான பல இடங்களிலும் மாணவர்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.
கலவரங்கள் தீவிரமடைந்த நிலையில், பங்களாதேஷில் சிறுபான்மை இந்து சமூகத்தை இலக்குவைத்து தாக்குதல்கள் நடைபெறுவதாகவும் முறைப்பாடுகள் எழுந்துள்ளன.
மைமன்சிங் மாவட்டம் பலுகா பகுதியை சேர்ந்த தீபு சந்திர தாஸ் (30) என்பவர், மத அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் ஒரு கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டு அவரது உடல் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் பங்களாதேஷில் வாழும் சிறுபான்மை இந்துக்களிடையே கடும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில், முகமது யூனுஸ் தலைமையிலான பங்களாதேஷ் இடைக்கால அரசு இந்த கொலைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பங்களாதேஷில் வன்முறைக்கு இடமில்லை என்றும், இந்த கொடூர குற்றங்களுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்றும் அரசு உறுதி அளித்துள்ளது.
மேலும், வன்முறையையும் வெறுப்பையும் நிராகரிப்பதன் மூலம் ஹாடிக்கு மரியாதை செலுத்துமாறு பொதுமக்களுக்கு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஷெரீப் உஸ்மான் ஹாடி உயிரிழந்ததைத் தொடர்ந்து, இன்று பங்களாதேஷில் தேசிய துக்க நாள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பங்களாதேஷ் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ஹாடி மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை கைது செய்ய பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கலவரக்காரர்களை கண்டதும் சுடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்ய இந்தியாவின் உதவியையும் பங்களாதேஷ் அரசு நாடியுள்ளது.
இதனிடையே, ஷெரீப் உஸ்மான் ஹாடி இந்தியாவுக்கு எதிரான தீவிர நிலைப்பாட்டைக் கொண்டவராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘அகண்ட பங்களாதேஷ்’ என்ற பெயரில் இந்திய பகுதிகளை உள்ளடக்கியதாக கூறப்படும் வரைபடங்களை அவர் பரப்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிங்கப்பூரில் இருந்து அவரது உடல் டாக்காவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், இன்று இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.
ஒரு மாணவர் தலைவரின் கொலை, இன்று பங்களாதேஷை முழுமையாக கலவரச் சூழ்நிலையில் தள்ளியுள்ளது.
அரசியல், மதம் மற்றும் தேச விரோத உணர்வுகள் ஒன்றிணையும் போது அதன் விளைவுகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை இந்த சம்பவங்கள் தெளிவாக காட்டுகின்றன.
கடந்த ஆண்டு நடைபெற்ற வன்முறைகளின் போதும், பங்களாதேஷில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்தன.
பங்களாதேஷில் அமைதி மீண்டும் நிலைநிறுத்தப்படுமா, வன்முறை கட்டுப்படுத்தப்படுமா என்பது வரும் நாட்களில் தான் தெளிவாகும்.





