சிட்னி துப்பாக்கிச் சூடு: உளவுத்துறை கட்டமைப்பை மாற்றியமைக்க ஆஸ்திரேலிய பிரதமர் அதிரடி உத்தரவு
சிட்னியின் போண்டி (Bondi) கடற்கரையில் கடந்த வாரம் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தேசிய உளவு மற்றும் பொலிஸ் முகமைகள் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உத்தரவிட்டுள்ளார்.
ஐஎஸ் (ISIS) சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு தந்தை மற்றும் மகனால் நடத்தப்பட்ட இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பு சூழல் வேகமாக மாறிவருவதால், தீவிரவாதத்தை ஒடுக்க பாதுகாப்புப் படைகளுக்குப் கூடுதல் அதிகாரம் மற்றும் புதிய கட்டமைப்பு தேவையா என்பது குறித்து இந்த விசாரணை அமையவுள்ளது.
தாக்குதல் நடந்து சரியாக ஒரு வாரம் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று ஆஸ்திரேலியா முழுவதும் தேசிய நினைவேந்தல் தினம் அனுசரிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களின் நினைவாக மௌன அஞ்சலி செலுத்தப்படுவதோடு, துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை மேலும் கடுமையாக்கவும் ஆஸ்திரேலிய அரசு திட்டமிட்டுள்ளது.





