விமான பயணத்தில் யூத எதிர்ப்பு: ஆஸ்திரேலிய இளைஞன் கைது!
இந்தோனேசியா பாலியில் இருந்து சிட்னி நோக்கி பயணித்த விமானத்தில் யூத எதிர்ப்பு மிரட்டல் விடுத்தார் எனக் கூறப்படும் பயணியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா, சிட்னியை சேர்ந்த 19 வயது இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
யூத எதிர்ப்பு மிரட்டலும், வன்முறையை குறிக்கும் வகையில் சைகை காட்டியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இவர் பயணித்த விமானம் சிட்னியில் நேற்று தரையிறங்கிய பின்னர், ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் அவரை கைது செய்தனர்.
இவருக்கு பொலிஸ் பிணை மறுக்கப்பட்டுள்ளது. இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
சிட்னி போண்டி கடற்கரையில் யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் ஒட்டு மொத்த உலகையும் உலுக்கியுள்ளது.
இந்நிலையில் யூத எதிர்ப்பு நடவடிக்கைக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஆஸ்திரேலியா தயாராகிவரும் நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.





