இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டுள்ள ஆப்பிரிக்க சர்வல் பூனை!
ரஷ்யாவின் மொஸ்கோவில் இருந்து Aeroflot விமானம் SU-288 மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) விமான சரக்கு முனையத்திற்கு ஆப்பிரிக்க சர்வல் பூனை ஒன்று கொண்டுவரப்பட்டதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உரிய அனுமதியின்றி இந்தப் பூனையை நாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த காட்டுப் பூனை இனம் CITES (காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் அழிந்துவரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தகம் பற்றிய மாநாடு) மூலம் பாதுகாக்கப்பட்ட விலங்காக நியமிக்கப்பட்டுள்ளது, மேலும் இது இலங்கையின் ‘சிறுத்தைகள்’ போன்ற தோற்றத்தை கொண்டுள்ளது.
இந்த காட்டுப் பூனைகள் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படுவதாகவும், எனவே இவற்றுக்கு சர்வதேச ரீதியில் அதிக கிராக்கி நிலவுவதாகவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த காட்டுப் பூனை தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், இலங்கை சுங்கம் மற்றும் வனவிலங்கு திணைக்களத்தின் பல்லுயிர் பாதுகாப்பு, கலாச்சார மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்பு பிரிவுகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.