பேரிடரால் சேதமடைந்த மத, தொல்பொருள் தளங்களை மீளமைக்க நடவடிக்கை!
அனர்த்தத்தினால் சேதமடைந்த மத, கலாசார மற்றும் தொல்பொருள் தளங்களை விரைவாக புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மத, கலாசார மற்றும் தொல்பொருள் தளங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய புனரமைப்பு பணிகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது.
ஜனாதிபதி அலுவலகத்தில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
பௌத்த பீடங்களின் மகா சங்கத்தினர் உட்பட சர்வமதத் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.
” நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத, கலாசார மற்றும் தொல்பொருள் தளங்கள் அனர்த்தத்தினால் சேதமடைந்துள்ளன.
மேற்படி இடங்களில் தேவையான புனரமைப்புப் பணிகளை உடனடியாகத் தொடங்கி, அவற்றை முன்னர் இருந்த நிலைக்கு மீளமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி இதன்போது உறுதியளித்தார்.
மகா சங்கத்தினர் மற்றும் மதத் தலைவர்களின் வழிகாட்டுதலின் கீழ், அந்த இடங்களின் தொன்மையை பாதுகாத்து, அனைத்து தொடர்புடைய தரப்பினரின் பங்கேற்புடன் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.





