அநுராதபுரத்தில் பிறந்து ஒரு நாளேயான சிசு கைவிடப்பட்ட நிலையில் மீட்பு!
அநுராதபுரம், இப்பலோகம மஹவ பிரதேசத்தில் ஓய்வுப் பெற்ற சுகாதார ஊழியர் ஒருவரின் வீட்டில் கைவிடப்பட்ட குழந்தையொன்று இன்று (03.10) பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.
பிறந்து ஒரு நாளேயான குழந்தையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, இப்பலோகம மஹவ பிரதேசத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார பெண் உத்தியோகத்தரின் வீட்டு வாசலில் பை ஒன்று கிடந்துள்ளது.
குறித்த பை அசைவதை அவதானித்த அவர் அதனை சோதனையிட்டபோது குழந்தையொன்று உயிருடன் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனடியாக செயற்பட்ட அவர், பொலிஸாருக்கு தகவல் வழங்கியதுடன், குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்றுள்ளார்.
குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் குறித்த குழந்தையை கைவிட்டுச் சென்றது யார் என்ற தகவல்கள் வெளியாகவில்லை. மஹவ பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் அண்மைக்காலமாக குழந்தைகள் இவ்வாறு தெருக்களில் வீசப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இளம் வயதில் ஏற்படும் காதல், மற்றும் அதனால் வயதிற்கு மீறிய உறவுகளில் இணைவதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் சிறு வயதிலேயே கர்ப்பமாகும் சம்பவங்களும் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





