6000 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கத்தின் தாக்குதலால் பாதிக்கப்பட்டாலும், உயிருடன் வாழ்ந்த இளைஞர்!
6,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இளைஞர் ஒருவர் சிங்கத்தின் தாக்குதலால் பாதிக்கப்பட்டபோதும் பல மாதங்கள் உயிருடன் வாழ்ந்தமைக்கான ஆதாரங்களை ஆய்வாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.
பல்கேரியாவில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சியின்போது தொடர்புடைய எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
குறித்த இளைஞரின் மண்டை ஓட்டில் பல கடித்த அடையாளங்கள் உள்ளதாகவும், அவை சிங்கத்தின் பல்லிலிருந்து வந்தவை என்பது தெளிவாக புலப்படுவதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறிப்பாக சிங்கத்தின் தாக்குதலால் அவரின் மூளை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தபோதிலும், தாக்குதலுக்கு பிறகு குறைந்தது இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை உயிர் வாழ்ந்தமைக்கான அடையாளங்கள் தென்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்த கண்டுபிடிப்பு எனியோலிதிக் (Eneolithic) காலத்தில் (புதிய கற்காலத்தில்) ஊனமுற்ற நபர்களுக்கான சமூக அமைப்பு மற்றும் பராமரிப்பு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் சிங்கங்களின் வரலாற்று வரம்பு பற்றிய நுண்ணறிவுகளை வழங்குவதாக ஆய்வாளர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு, புதிய கற்காலம் முதல் இரும்பு யுகத்தின் பிற்பகுதி வரை, பல்வேறு கிழக்கு ஐரோப்பிய இடங்களில் சிங்கங்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.





