கிணற்றுக்குள் விழுந்த பூனை… காப்பாற்றுவதற்காக குதித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலி!
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாழடைந்த கிணற்றில் விழுந்த பூனையை மீட்க, ஒருவர் பின் ஒருவராக குதித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், அகமது நகருக்கு உட்பட்ட வட்கி கிராமத்தில் பாழடைந்த கிணற்றில் நேற்று இரவு பூனை ஒன்று விழுந்தது. அதனை காப்பாற்ற ஒருவர் பின் ஒருவராக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அடுத்தடுத்து கிணற்றுக்குள் குதித்தனர். உள்ளே சென்ற நபர்கள் திரும்பி வராததாலும், அவர்களிடமிருந்து எவ்வித சமிக்ஞையும் கிடைக்காததாலும், ஆறாவதாக ஒரு நபர் இடுப்பில் கயிற்றைக் கட்டிக் கொண்டு கிணற்றில் இறங்கினார்.
கிணற்றில் குதித்த 5 பேரும் உயிரிழந்த நிலையில் கயிறு கட்டி இறங்கிய நபர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். தற்போது அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக நெவாசா காவல் நிலைய மூத்த பொலிஸ் அதிகாரி தனஞ்செய் ஜாதவ் கூறுகையில், “புழக்கத்தில் இல்லாத அந்த கிணறு உயிரி எரிவாயு (பயோ கேஸ்) குழியாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அதில் விலங்குகளின் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. எனவே, விஷவாயு தாக்கி அவர்கள் இறந்திருக்கலாம். உயிரிழந்த 5 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.
கிணற்றில் விழுந்த பூனையை காப்பாற்றச் சென்று 5 பேர் உயிரிழந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.