அமெரிக்க கிறிஸ்தவ சபையில் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான 600 சிறார்கள்! 56 பேர் மீது குற்றச்சாட்டு
அமெரிக்காவில் கத்தோலிக்க கிறிஸ்தவ சபையில் 600 சிறுவர், சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர்.
பால்டிமோர் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கிறிஸ்தவ சபையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் இதுதொடர்பாக 156 பாதிரியார்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணம், பால்டிமோர் நகரில் 233 ஆண்டுகள் பழமையான கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது.
இது பால்டிமோர் கத்தோலிக்க சபையின் தலைமை தேவாலயம் ஆகும். இந்த தலைமை தேவாலயம் மற்றும் இதன் கீழ் செயல்படும் தேவாலயங்களில் பணியாற்றும் பாதிரியார்கள் மீது தொடர்ச்சியாக பாலியல் புகார்கள் எழுந்து வந்தன.
இந்த விவகாரம் தொடர்பாக மேரிலேண்ட் அட்டர்னி ஜெனரல் (அரசு வழக்கறிஞர்) கடந்த 2018-ம் ஆண்டில் விசாரணையைத் தொடங்கினார்.
கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் அட்டர்னி ஜெனரல் அந்தோணி பிரவுண் அண்மையில் 463 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கையை வெளியிட்டார். அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த அறிக்கையின் சுருக்கம் வருமாறு:
அமெரிக்காவின் முதல் கத்தோலிக்க திருச்சபை, பால்டிமோர் திருச்சபை ஆகும். இதன் கீழ் 153 தேவாலயங்கள், 59 பள்ளிகள், 24 பாதிரியார் பயிற்சி பள்ளிகள், 26 கன்னியாஸ்திரி பயிற்சி பள்ளிகள் செயல்படுகின்றன.
கடந்த 1940-ம் ஆண்டு முதல் பால்டிமோர் தலைமை தேவாலயம் மற்றும் அதன் கீழ் செயல்படும் தேவாலயங்கள் மற்றும் பள்ளிகளில் சுமார் 600-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர்.
அரசு தரப்பு விசாரணையின்படி 156 பாதிரியார்கள், சிறுவர், சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி இருப்பது தெரியவந்துள்ளது.
ஆனால் திருச்சபை நிர்வாகம் அனைத்து தவறுகளையும் மூடி மறைத்துள்ளது. மதரீதியான ஆலோசனைக்கு வந்த சிறுவர், சிறுமிகளையும் பாதிரியார்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி உள்ளனர். எதிர்ப்பு தெரிவித்த சிறுவர், சிறுமிகளை, பாதிரியார்கள் மிரட்டி உள்ளனர். சிலரின் பெற்றோரையும் மிரட்டி உள்ளனர். கத்தோலிக்க திருச்சபை நிர்வாகம் சம்பந்தப்பட்ட பாதிரியார்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என கூறப்படுகின்றது.