சரிவடைந்துள்ள பிறப்பு விகிதம்… ஜப்பான் மொத்தமாக காணாமல் போய்விடும்: பிரதமரின் ஆலோசகர் எச்சரிக்கை
பிறப்பு விகிதம் சரிவடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க தவறினால் ஜப்பான் நாடு மொத்தமாக காணாமல் போய்விடும் என பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் ஆலோசகர் எச்சரித்துள்ளார்.
பிறப்பு விகிதம் சரிவடைவது தொடர்பில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்காமல், நாம் இப்படியே தொடர்ந்தால் அது நமது எதிர்காலத்தை நாமே அழிப்பதற்கு ஒப்பானது என்றார் மசாகோ மோரி.
2022ல் பிறப்பு எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளதை சுட்டிக்காட்டியே பிரதமரின் ஆலோசகரான மசாகோ மோரி எச்சரித்துள்ளார். மேலும், கடந்த ஆண்டில் பிறப்பை விட இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 800,000 பிறப்புகள் மொத்தமாக பதிவாகியுள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கையானது 1.58 மில்லியன் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து, பிள்ளைகளுடனும் குடும்பத்தினருடனும் செலவிடும் நேரத்தை ஜப்பானிய மக்கள் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் ஃபுமியோ கிஷிடா முன்வைத்தார்.
இதனிடையே, ஜப்பானில் 65 அல்லது அதற்கும் அதிக வயதுடையோர் எண்ணிக்கையானது 2022ல் சுமார் 29% அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பிறப்பு விகிதம் அதிகரிக்காமல் போனால் சமூக பாதுகாப்பு அமைப்பு வீழ்ச்சியடையும், தொழில்துறை மற்றும் பொருளாதார வலிமை குறையும் எனவும் மசாகோ மோரி சுட்டிக்காட்டியுள்ளார்.