சிங்கப்பூரில் ஒரு வயதுக் குழந்தைக்கு பெண் செய்த அதிர்ச்சி செயல்
சிங்கப்பூரில் ஒரு வயதுக் குழந்தையின் முகத்தில் பலமுறை அடித்து வலது கன்னத்தில் காயமேற்படுத்தியதாக 40 வயதுப் பெண் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சிசுப் பராமரிப்பு நிலையத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும் அந்தப் பெண் குறித்த விவரங்களை வெளியிட நீதிமன்றம் அனுமதிக்கவில்லை.
பாதிக்கப்பட்ட குழந்தையின் அடையாளத்தைப் பாதுகாக்க நீதிமன்றம் அந்தத் தடையை விதித்தது.
இந்த ஆண்டு (2023) மார்ச் 15ஆம் திகதி குழந்தையை மோசமாக நடத்தியதாக அந்தப் பெண் மீது குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டுள்ளது.
குற்றத்தை ஒப்புக்கொள்ள விரும்புவதாகவும் வழக்கறிஞரை நியமிக்கும் எண்ணம் இல்லை என்றும் அவர் கூறினார்.
அந்த வழக்கு அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் மீண்டும் விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமது பாதுகாப்பில் விடப்பட்ட குழந்தையை அடித்துக் காயப்படுத்திய குற்றத்துக்காக அந்தப் பெண்ணுக்கு 8 ஆண்டுகள் வரை சிறை அல்லது 8,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.\