மருதமலை கோவிலுக்கு மலைப்பாதையில் வாகனங்களில் செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு
கோவை மருதமலை கோவிலில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதால் வருகின்ற 5ம் திகதி முதல் ஒரு மாத காலத்திற்கு மலைபாதையில் வாகனங்கள் செல்வதற்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்தான செய்தி அறிக்கையில் “மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக மின்தூக்கி அறை, காத்திருப்பு அறை, கட்டண சீட்டு வழங்கும் இடம் ஆகியவற்றுடன் மின்தூக்கி(LIFT) வசதி ஏற்படுத்தும் பணி, மலைசாலையில் உள்ள தார் சாலையை சீரமைத்தல் பணி, கோவிலின் மலை மேல் புதிதாக யாகசாலை மண்டபம் கட்டும் பணி, கோவிலில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் புதிதாக கழிப்பறைகள் கட்டும் பணி மற்றும் கோவில் தங்கரதம் உலா வரும் பாதையில் கருங்கல் தளம் அமைக்கும் பணிகள் ஆகியவை நடைபெற்று வருவதால் வருகின்ற அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி (05.10.2023) முதல் ஒரு மாத காலத்திற்கு மலைபாதையில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது.