நான் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் – போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள டிரம்ப்
தாம் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என தெரிவித்துள்ள அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், தமது ஆதரவாளர்களிடம் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மட்டுமின்றி, பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு பெருந்தொகை கையூட்டு வழங்கிய விவகாரத்தில் நியூயார்க் கிராண்ட் ஜூரி விசாரணையை தமது ஆதரவாளர்கள் முடக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.ஆனால், டிரம்ப் கைது செய்யப்பட இருப்பதாக இதுவரை அதிகாரிகள் தரப்பில் இருந்து எந்த தகவலும் கசியவில்லை என அவரது சட்டத்தரணிகளே குறிப்பிட்டுள்ளனர்.
சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ள டொனால்டு ட்ரம்ப், தாம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்படலாம் என குறிப்பிட்டிருந்தார். டிரம்பின் சமூக ஊடக பதிவானது, தமது ஆதரவாளர்களை தூண்டிவிடும் நடவடிக்கை என்றே கூறப்படுகிறது.அத்துடன் அடுத்த சில மணி நேரத்தில் தமது ஆதரவாளர்களிடம் இருந்து நிதி திரட்டும் நடவடிக்கையும் டிரம்ப் முன்னெடுத்துள்ளார் என்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அமெரிக்கா மெல்ல சாகும் நிலையில் இருப்பதை இனி நாம் பொறுமையாக வேடிக்கை பார்க்க முடியாது என குறிப்பிட்டுள்ள டொனால்டு டிரம்ப், அமெரிக்காவை நாம் காப்பாற்ற வேண்டும், ஆர்ப்பாட்டத்தில் குதியுங்கள் என தமது ஆதரவாளர்களை டிரம்ப் தூண்டி விட்டுள்ளார்.
2021 ஜனவரி 6ம் திகதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் கலவரத்தை ஏற்படுத்த இதுபோன்ற வார்த்தைகளையே டொனால்டு ட்ரம்ப் பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.