நித்தியானந்தா தொடர்பில் ஐ.நாவில் கைலாசா பெண் பிரதிநிதி கவலை !
ஐ.நா. சபைக் கூட்டத்தில் இந்தியாவை சேர்ந்த சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவின் ‘கைலாசா பிரதிநிதிகள் கலந்துகொண்டமை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தியாவில் நித்தியானந்தா மீது கடத்தல், குழந்தைகளைச் சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இதனையடுத்து வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா மத்திய ஈக்வடாரில் தீவு ஒன்றை வாங்கி அதற்கு கைலாச நாடு என்ற பெயரிட்டு அதற்கான கொடியையும் வெளியிட்டார்.
அந்த நாடு குறித்து www.kailaasa.org என்ற இணையதளத்தில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், கடந்த 22ம் திகதி ஜெனீவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் நித்தியானந்தாவின் பெண் சீடர்கள் கலந்துகொண்டுள்ளனர்.ஐ.நா. சபைக் கூட்டத்தில் கைலாசா பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் விஜயப்ரியா பேசுகையில், “கைலாசா என்பது இந்து மதத்தின் முதல் இறையாண்மை கொண்ட நாடு. இந்து மதத்தின் உயர்ந்த தலைவரான நித்தியானந்தாவால் கைலாசா உருவாக்கப்பட்டது.
நித்தியானந்தா இந்து மதத்தின் மரபுகளை புதுப்பிக்கிறார். இந்து மதத்தின் பூர்விக மரபுகள் மற்றும் வாழ்க்கை முறையைப் புதுப்பித்ததற்காக எங்கள் தலைவர் நித்தியானந்த கடுமையான துன்புறுத்தல் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு ஆளாகியுள்ளார்.
நித்தியானந்தா மற்றும் கைலாசாவில் உள்ள புலம்பெயர்ந்த 20 இலட்சம் மக்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க சர்வதேச அளவில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும்? என ஐ.நா.விடம் விஜயப்ரியா கேட்டுள்ளார்.மேலும், கைலாசா 150 நாடுகளில் தூதரகங்களை கொண்டுள்ளதாகவும், மேலும், பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களை நிறுவியுள்ளதாகவும் விஜயப்ரியா கூறினார்.