ஆர்ப்பாட்டங்களின் போது காலாவதியான கண்ணீர்ப்புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டனவா : பொலிஸார் விளக்கம்!
காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டுகள் செயலிழந்தவையாகவும் , செறிவு குறைந்தவையாகவுமே காணப்படும் என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
கடந்த வாரம் கொழும்பிலும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது பாதுகாப்பு தரப்பினரால் காலாவதியானதும் , விஷத்தன்மையுடையதுமான கண்ணீர்ப்புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவற்றைக் கொண்டு ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த முடியாது. சில தரப்பினரால் தெரிவிக்கப்படுவதைப் போன்று கடந்த வாரங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கு பிரயோகிக்கப்பட்ட கண்ணீர்ப்புகைக் குண்டுகள் காலாவதியானவையல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பொலிஸ் திணைக்களத்தினால் கொள்வனவு செய்யப்படுகின்றன. பகிரங்க விலை மனு கோரலின் அடிப்படையில் , ஒழுங்கு முறைமையொன்றின் அடிப்படையிலேயே அவை கொள்வனவு செய்யப்படுகின்றன எனவும், தொழிற்சங்க குழுவொன்று நியமிக்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஆர்ப்பாட்டங்களின் போது உயிரிழந்ததாகக் கூறப்படும் நபர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கப் பெறவில்லை. எனவே மரணத்திற்கான காரணம் குறிப்பிடப்படும் வரை அது தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் வெளியிட முடியாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.