அமெரிக்க கொடியுடன் பயணித்த கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 90 புலம்பெயர்ந்தோர்!
அமெரிக்க கொடியுடன் பயணித்த கப்பலில் இருந்து 37 குழந்தைகள் உள்பட 90 புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டுள்ளதாக கிரீஸில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த கப்பல் துருக்கியில் இருந்து இத்தாலிக்கு செல்ல இருந்ததாக நம்பப்படுகிறது.
ஏதென்ஸுக்கு தென்மேற்கே சுமார் 250 கிலோமீட்டர் (155 மைல்) தொலைவில் உள்ள கிரேக்க தீவான கைதிராவில் இருந்து பேரிடர் அழைப்பு கிடைக்கப்பெற்றதை அடுத்து அதிகாரிகள் மீட்பு பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த கப்பலில், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான், ஈராக், எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 35 ஆண்கள், 18 பெண்கள், 27 சிறுவர்கள் மற்றும் 10 சிறுமிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பயணிகளில் இருவர் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர், மற்றவர்கள் பதிவுக்காக அருகிலுள்ள பிரதான துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.