உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்று புதிய சாதனை படைத்த ஆஸ்திரேலியா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்களில் ஆல் அவுட்டானது.
2வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 270 ரன்களை எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனால் இந்தியா வெற்றி பெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நான்காம் நாள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், ஐந்தாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் சீரான இடைவெளியில் இந்தியா விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில் இந்தியா 2-வது இன்னிங்சில் 234 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியதன் மூலம் ஐசிசி நடத்தும் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற வரலாற்று சாதனையை ஆஸ்திரேலியா அணி படைத்துள்ளது.
ஐசிசி 50 ஓவர் உலக கோப்பை, டி 20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய சர்வதேச தொடர்களை நடத்தி வருகிறது.
இந்த 4 விதமான தொடர்களிலும் சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற சாதனையை ஆஸ்திரேலியா படைத்துள்ளது.