இந்தியா – நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நிறைவு
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நிறைவடைந்ததாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
‘‘இந்தியா – நியூசிலாந்து உறவில், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டில் இது ஒரு முக்கிய தருணம் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இருதரப்பு தடையற்ற வர்த்தக பேச்சுவார்த்தை தொடங்கி ஒன்பது மாதங்களில் நிறைவடைந்திருப்பது ஒரு வரலாற்று மைல்கல் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை ஆழப்படுத்துவதற்கான வலுவான அரசியல் விருப்பம் இதில் பிரதிபலிப்பதாக தெரிவித்த மோடி மேம்பட்ட சந்தை அணுகல், ஆழமான தொடர் முதலீடுகள் ஆகியவற்றை இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உறுதி செய்கிறது எனவும் கூறியுள்ளார்.
இதனால், புதுமைகளைப் படைப்பவர்கள், தொழில்முனைவோர், விவசாயிகள், சிறு, மற்றும் நடுத்தர தொழில்கள், மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு ஏராளமான வாய்ப்புகள் உருவாகும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேலும் தெரிவித்துள்ளார்.





