பிரித்தானிய உள்துறை அமைச்சகம் மீது இணைய தாக்குதல்: விசா தகவல்கள் திருடப்பட்டதா?
பிரித்தானியாவில் விசா விவரங்கள் உள்ளிட்ட அரசாங்கத்தின் தரவுகள் திருடப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வர்த்தக அமைச்சர் கிறிஸ் பிரையன்ட் (Chris Bryant) இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கூறியுள்ளார்.
சீனாவுடன் தொடர்புடைய ஒரு குழு இந்த தாக்குதலுக்குப் பின்னால் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது என்றும் தொடர்புடைய குழுவை கண்டறிய புலனாய்வாளர்கள் பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனி நபர்கள் மிகக் குறைவாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக விசா விவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் ஹேக்கர் குழுவினால் திருடப்பட்டிருக்கலாம் என சன் செய்தித்தாள் செய்தி வெளியிட்டிருந்தது. அத்துடன் தகவல் ஆணையத்திற்கும் தெரிவித்திருந்தது.
அப்போதும் சீனாவுடன் தொடர்புடைய ஹேக்கர் குழுக்களே மேற்படி நடவடிக்கைகயை முன்னெடுத்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்பட்டது.
இதற்கிடையே சீனாவிலிருந்து பெரிய அளவிலான உளவு பார்த்தல் அதிகரித்து வருவதாகவும், வணிக மற்றும் அரசியல் தகவல்களை அவர்கள் குறிவைப்பதாகவும் இங்கிலாந்து உளவுத்துறை அமைப்புகளும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





