ரயில் கட்டமைப்பை மீளமைக்க சீனாவிடம் தொழில்நுட்ப உதவி கோருகிறார் அநுர!
பேரிடரால் சேதமடைந்த ரயில் கட்டமைப்பை மீளமைப்பதற்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்குமாறு சீனாவிடம், இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன தேசிய மக்கள் காங்கிரஸ்ன் உப தலைவர் வாங் டோங்மிங் உள்ளிட்ட சீன தூதுக்குழுவினர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இன்று சந்தித்து பேச்சு நடத்தினர்.
இதன்போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்படி கோரிக்கையை விடுத்தார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டமை தொடர்பில் உப தலைவர் உள்ளிட்ட தூதுக் குழுவினருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நன்றி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க சீனா இலங்கைக்கு வழங்கிய பொருள் மற்றும் நிதி உதவியையும் அவர் மனப்பூர்வமாக பாராட்டினார்.
அத்துடன், இலங்கை எதிர்கொண்ட அனர்த்த நிலைமை மற்றும் மறுசீரமைப்பு முன்னெடுப்புகள் தொடர்பில் சீன பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.
“ பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதே அரசாங்கத்தின் பிரதான பிரயத்தனமாக இருந்தது.
அதன்பின்னர் அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து உணவு மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.” என்று ஜனாதிபதி விளக்கமளித்தார்.
அவர்களின் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்காக திட்டமிடப்பட்ட வகையில் பணியாற்றி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.





