வெருகல் பிரதேச செயலாளருக்கு ஆதரவாக வெருகலில் ஆர்ப்பாட்டம்!!
திருகோணமலை வெருகல் பிரதேச செயலாளருக்கு ஆதரவாக மக்கள் இன்று (16) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெருகல்,மாவடிச்சேனை, சேனையூர்,வட்டவான் போன்ற கிராமங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நிற்கதியாக இருந்த நிலையில் பிரதேச செயலாளர் வீடு வீடாக வந்து எங்களை ஏற்றிக் கொண்டு சென்று முகாமில் தங்க வைத்தனர்.
முகாமில் இருந்த பத்து நாட்களும் அவர் எங்களுடன் நாங்கள் சாப்பிட்ட உணவையே சாப்பிட்டு எங்களுடைய முகாமை பார்வையிட்டு வந்தார்.
இவ்வாறான ஒரு தொண்டு சேவையில் ஈடுபட்ட பிரதேச செயலாளர் மீண்டும் எங்களை வீட்டில் குடியமர்த்துவதற்கு பாரிய சேவையை செய்தார். இவ்வாறான ஒரு பிரதேச செயலாளர் எமக்கு தேவை என கூறி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை கடந்த 13 ஆம் திகதி வெருகல் பிரதேச செயலகத்துக்கு முன்னால் பிரதீஸ் செயலாளர் வேண்டாம் என ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்களை ஊக்குவித்து குழப்பங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்றம் கட்டளையிட்டிருந்தது.
அத்துடன் வெருகல் பிரதேச செயலக ஊழியர்கள் வெள்ள அனர்த்தத்தின்போது பல முன்னெடுப்புகளை மேற்கொண்ட தங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக பிரதேச செயலக ஊழியர்கள் கடந்த 15 ஆம் திகதி பனிப் பாஸ்கரிப்பில் ஈடுபட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.





