மலாவி ஜனாதிபதியாக இரண்டாவது முறை பதவியேற்ற பீட்டர் முத்தாரிகா
உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றான மலாவியின் ஜனாதிபதியாக இரண்டாவது முறை பதவியேற்ற பிறகு, பீட்டர் முத்தாரிகா அரசாங்க ஊழலை ஒழித்து, பொருளாதார நெருக்கடியில் உள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதாக சபதம் எடுத்துள்ளார்.
85 வயதான முத்தாரிகா, கடந்த மாதம் 56% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று 33% வாக்குகள் பெற்ற 70 வயது லாசரஸ் சக்வேராவை தோற்கடித்தார்
ஜனநாயக முற்போக்குக் கட்சியின் ஆதரவாளர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் ஆப்பிரிக்க தலைவர்கள் நிறைந்த வணிக நகரமான பிளான்டைரில் உள்ள ஒரு அரங்கத்தில் முத்தாரிகா அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.
பதவியேற்ற பிறகு தனது தொடக்க உரையில், “மலாவி கடுமையான உணவுப் பற்றாக்குறை, வாழ்க்கைச் செலவு மற்றும் அந்நியச் செலாவணி பற்றாக்குறையை எதிர்கொள்கிறது, இது வணிகங்களை முடக்கி, தொடர்ச்சியான எரிபொருள் பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ளது, ஆகவே நாட்டின் முதலீட்டிற்காக சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை நேரடியாக சந்தித்து பொருளாதார நிலைமைகள் குறித்து விவாதிக்க விரைவில் அமெரிக்காவிற்கு ஒரு குழுவை அனுப்பப் போவதாக தெரிவித்துள்ளார்.





