தமிழ்நாட்டில் நைஜீரியா நாட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

கோவையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக நைஜீரிய நாட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
2012 ஜூலை 17ம் திகதி சென்னை போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு, ஒரு கூரியர் அலுவலகத்தில் மூன்று பார்சல்களில் சர்வதேச சந்தையில் 2 கோடிக்கு மேல் மதிப்புள்ள 1.195 கிலோ ஹெராயின் மற்றும் 200 கிராம் மெதகுவாலோனைக் கண்டுபிடித்தது.
இதனை தொடர்ந்து, ஈரோட்டில் சட்டவிரோதமாக வசித்து வந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த 40 வயது இம்மானுவேல் சுக்வுனோன்சோ சாம்சன் கைது செய்யப்பட்டார்.
அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது, அதிகாரிகள் நான்கு கிலோ கஞ்சாவைக் கண்டுபிடித்தனர்.
அவரை விசாரித்தபோது, சாம்சன் கூரியர் சேவைகள் மூலம் போதைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்ததாகவும், சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது.