கிளியோபட்ராவின் கல்லறை நீருக்கடியில் உள்ளதா?

வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராணிகளில் ஒருவராக கிளியோபட்ரா அறியப்படுகிறார்.
அவருடைய மறைவுக்கு பிறகு கல்லறையை தேடும் பணிகள் எகிப்தில் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அந்த கல்லறை கிடைக்கப்பெறும் பட்சத்தில் பல இரகசிய தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவருடைய கல்லறை பற்றிய சிறிய தகவல்கூட கிடைக்கப்பெறவில்லை. முன்னதாக எகிப்து கரையில் அமைந்துள்ள தபோசிரிஸ் மேக்னாவில் ஒரு சுரங்கப்பாதையை ஆய்வாளர்கள் கண்டுப்பிடித்தனர்.
சுமார் 1305 மீட்டர் நீளம் கொண்ட இந்த சுரங்கப்பாதை கோயிலின் கீழ் அமைந்துள்ளது. மணற்கற்களால் செதுக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை கிரேக்க தீவான சமோஸில் உள்ள புகழ்பெற்ற யூபலினோஸ் சுரங்கப்பாதையை ஒத்திருக்கிறது எனக் கூறப்பட்டது.
இருப்பினும் அவருடைய கல்லறை மாத்திரம் கண்டுப்பிடிக்கவில்லை. இந்நிலையில் தற்போது அவருடைய கல்லறையை கண்டுப்பிடிக்கும் பணியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நெருக்கமாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது அவருடைய கல்லறை நீருக்கடியில் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க பண்டைய நகரமான அலெக்ஸாண்ட்ரியாவின் கடற்கரையிலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவில், கடலின் ஆழத்தில் மூழ்கிய நிலையில் காணப்படும் ஒரு துறைமுகத்தை கண்டுப்பிடித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
40 அடி ஆழத்தில் மூழ்கிய இந்த துறைமுகத்தில் காதலர்களின் எச்சங்கள் இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.
கிமு 51 முதல் கிமு 30 வரை எகிப்தை ஆண்ட கிளியோபட்ரா, தான் விரும்பியதைப் பெற தனது அழகையும் பாலியல் கவர்ச்சியையும் பயன்படுத்தினார்.
ரோமானிய சர்வாதிகாரி ஜூலியஸ் சீசர் மற்றும் அவரது வாரிசுகளில் ஒருவரான மார்க் ஆண்டனி உட்பட அவருக்கு ஏராளமான காதலர்கள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கிளியோபாட்ராவும் ஆண்டனியும் தற்கொலை செய்து கொண்டு ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் ‘2,000 ஆண்டுகளுக்குப் பிறகு யாரும் அங்கு சென்றதில்லை,’ என்று ஆய்வாளர் மார்டினெஸ், நேஷனல் ஜியோகிராஃபிக்கிடம் கூறியுள்ளார்.