காலத்தின் அருமையை உணர்வோம்
வாழ்க்கையில் முன்னேற விரும்புகிறவர்கள் காலத்தின் அருமையை உணர்ந்து செயல்பட வேண்டும். காலம் கழிந்த பிறகு கவலைப்படுவதால் பயனில்லை. சிந்திய பாலும், கழிந்த காலமும், விடுத்த அம்பும், பேசிய பேச்சும் திரும்ப வராது. முடிந்து போனவற்றைப் பற்றியே முணுமுணுத்துக் கொண்டிருப்பது மூடத்தனம். இயற்கையின் இயக்கத்தைச் பாருங்கள். ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு நொடியும் வளர்ந்து கொண்டிருக்கிறது.
விதைகள் முளைப்பதற்காக போராடுகின்றன. ஒரு குஞ்சு முட்டையிலிருந்து வெளியே வர போராடுகிறது. உயிரின் அடுத்த நிலையை அடைய போராட்டம் தேவைப்படுகிறது. இந்த போராட்டத்தில் வெற்றிபெற காலத்தின் அருமையை கட்டாயம் உணர வேண்டும். கடலிலே செல்பவர்க்கு கப்பல்களில் திசை காட்டும் கருவி தேவைப்படுகிறது.
வாழ்க்கைப் பயணத்தில் கடிகாரங்கள் தேவைப்படுகின்றன. காலையில் மணியடித்து எழுப்பி விடுகிறது. நமது பணிகளை முடிக்க நம்மை உந்தித் தள்ளுகிறது. பொழுது போகவில்லை என்று கூறுவது சோம்பேறிகளின் சொற்கள். பொழுது போதவில்லை என்பது வெற்றியாளர்களின் வார்த்தைகள்.
வரலாற்றில் இடம் பெற்றவர்கள் எல்லாம் அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கம் உடையவர்கள். காலத்தின் அருமையை அறிந்ததால்தான் வள்ளுவன் காலம் அறிதல் என்று ஒரு அதிகாரத்தையே எழுதி வைத்துள்ளார். காலமும் இடமும் அறிந்து செயல்பட்டவர்கள் சாதனை புரிந்தார்கள். இந்த இரண்டையும் அறிந்து அதன்படி செயல்படாததால் அளப்பரிய ஆற்றல் கொண்டவர்களும் தோற்றுப் போனார்கள். காலம் கண்ணானது கடமை பொன்னானது என்பது நம்மை ஊக்கப்படுத்தும் உபதேசமொழி. வாழ விரும்புகிறவர்களும், வாழ்க்கையை வெல்ல நினைப்பவர்களும் காலத்தைக் கழிக்கக் கூடாது. காலத்தைப் பெருக்க வேண்டும்.
காந்தியடிகள் காலை 4 மணிக்கே எழுந்து விடுவார். அவர் ஆச்ரமத்தில் இருக்கும் அனைவரையும் எழுப்பி விட்டு தம்மைப் போலவே அனைவரும் இருக்க வேண்டும் என்று விரும்பினார். காலத்தை அவர் மதித்ததால்தான் காலம் கடந்தும் அவர் வாழ்கிறார்.
நேருவும் இரவு பகல் பாராமல் உழைத்தவர். அவர் மறைவதற்கு முதல் நாள் இரவு வழக்கம் போல் வெகு நேரம் வேலை செய்துள்ளார். கோப்புகளைப் படித்தார். கடிதங்கள் எழுதினார். பிறகு இந்திரா அம்மையாரைக் கூப்பிட்டு எல்லாவற்றையும் முடித்துவிட்டேன் என்றார். மறுநாள் காலை அவர் உடல்நிலை மோசமானது பிற்பகல் 2மணிக்கு மறைந்தார். காலத்தின் அருமையை அவர் போற்றியதால்தான் தேசமும் இன்றும் அவரைப் போற்றுகிறது.
வாழ்க்கையை அழகுபடுத்து. முடியாவிட்டால் அசிங்கப்படுத்தாமல் இரு என்றார் எழுத்தாளர் அகிலன். நாம் வாழ்க்கையை அழகுபடுத்துவோம். காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. விரைந்து செல்லுங்கள்.
நன்றி – கல்கி