ஜம்மு காஷ்மீரில் இந்திய அணியின் தோல்வியைக் கொண்டாடிய 7 மாணவர்கள் கைது
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் தோல்வியை கொண்டாடிய கல்லூரி மாணவர்கள் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியாவின் தோல்வியை கொண்டாடி முழக்கமிட்டதாக, காஷ்மீரை சேர்ந்த 7 கல்லூரி மாணவர்கள் ஊபா சட்டத்தின் கீழ் இன்று கைது செய்யப்பட்டனர்.
ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா வெற்றி பெற, இந்தியா போராடித் தோற்றது.
இந்திய மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டங்களில், இறுதி ஆட்டம் வரை முன்னேறிய இந்தியா, இந்தியர்களின் நம்பிக்கையை பொய்க்கச் செய்து, பரிதாபமாக தோற்றது.
இந்த இழப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் ஏமாற்றத்தை விளைவித்தாலும், விளையாட்டை விளையாட்டாக எதிர்கொள்ளும் பக்குவம் கைவரப் பெற்றவர்கள் எளிதில் அவற்றை கடந்து சென்றனர்.
ஆனாலும், உலகக் கோப்பைக்கான இறுதி ஆட்டம் முடிந்து ஒரு வாரம் முடிந்த பிறகும், ரசிகர்கள் மத்தியில் அது தொடர்பான சர்ச்சைகள் ஓயவில்லை. அப்படியொரு சர்ச்சை காஷ்மீரில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் எழுந்தது.
ஷேர்-இ-காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பயிலும் 7 மாணவர்களை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்(ஊபா) கீழ் கைது செய்திருப்பதை காஷ்மீர் போலீஸார் உறுதி செய்தனர்.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வியைக் கொண்டாடியதற்காகவும், அப்போது ஆட்சேபனைக்குரிய முழக்கங்களை எழுப்பியதற்காகவும், விவசாயப் பல்கலைக்கழக மாணவர்கள் ஏழு பேர் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
கல்லூரி மாணவர்கள் மீது புகார் அளித்த சக மாணவர்கள் சிலர், இந்தியாவின் தோல்வியை 7 பேரும் கொண்டாடியதாகவும், அதனை தட்டிக்கேட்ட தங்களை துன்புறுத்தியதாகவும், காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.