ஒருவருடத்தில் 43000 அகதிகள் : திசை திருப்பப்படும் பிரித்தானிய மக்கள்!
 
																																		பிரித்தானியாவில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி முதல் இந்த ஆண்டு (2025) ஒக்டோபர் 31 ஆம் திகதிவரையான காலத்தில் சுமார் 43 ஆயிரத்திற்கும் அதிகமான சட்டவிரோத குடியேறிகள் நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதாக கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
தற்போது பிரித்தானியாவில் சட்டவிரோத குடியேறிகள் தொடர்பான பிரச்சினை நாட்டு மக்கள் எதிர்நோக்கும் முக்கிய சவாலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய கருத்துகணிப்பின்படி, உள்ளுரில் செல்வாக்கு செலுத்தும் முக்கிய பிரச்சினைகளில் முதல் மூன்று இடங்களில் சட்டவிரோத குடியேறிகள் தொடர்பான பிரச்சினை காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
4,368 பெரியவர்களிடம் மட்டும் நடத்தப்பட்ட YouGov கருத்துக்கணிப்பில், பெரும்பாலானவர்கள் இது ஒரு கற்பனையான பீதி என விவரித்துள்ளனர். அத்துடன் உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்கள் திசைதிருப்பப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஒட்டுமொத்தத்தில் வாழ்க்கைச் செலவுக்குப் பிறகு, தேசிய அளவில் மக்களுக்கு இரண்டாவது மிக முக்கியமான பிரச்சினையாக சட்டவிரோத குடியேற்றம் இடம்பெறுவதாக கருத்து கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் தொழிற்கட்சி அரசாங்கம் சட்டவிரோத குடியேறிகளை கையாள பல விடயங்களை அமுல்படுத்தி வருகிறது. குறிப்பாக விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ள குடியேறிகளை இராணுவ முகாமிற்கு மாற்றுதல், பிரான்ஸுடன் போடப்பட்டுள்ள வன் இன் – வன் அவுட் ஒப்பந்தம், டிஜிட்டல் அடையாள முறை இவ்வாறாக பல திட்டங்களை கையில் எடுத்துள்ளது.
இருப்பினும் தற்போது வரையில் எந்த திட்டமும் கைக்கொடுக்கவில்லை. இது மக்கள் மத்தியில் கடும் புயலை கிளப்பியுள்ளது. மக்களின் வரி பணத்தில் புலம்பெயர்ந்தோருக்கு சலுகைகளை வழங்குவதை மக்கள் வெகுவாக விமர்சித்து வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க வரும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் வரி உயர்வை மேற்கொள்ள அரசாங்கம் பரிசீலித்து வருதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஏற்கனவே வாழ்க்கை சுமையுடன் போராடி வரும் மக்களுக்கு இந்த வரி உயர்வு மேலும் சுமையாக மாறும். ஆகவே மக்கள் தற்போது தொழிற்கட்சி அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
        



 
                         
                            
