உத்தரபிரதேசத்தில் ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானதில் 4 பேர் மரணம்

உத்தரபிரதேசத்தின் சீதாபூர் (Sitapur) மாவட்டத்தில், டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் (ambulance) விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரகண்டிலிருந்து (Uttarakhand) வாரணாசிக்கு (Varanasi) ஒரு நோயாளியை ஏற்றிச் சென்ற போது அடாரியா (Ataria) காவல் நிலைய பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையில் இருந்த ஒரு பெண் மற்றும் ஒரு சிறுமி உட்பட மூன்று பேர் மீது மோதியுள்ளது.
இந்நிலையில், ஆம்புலன்சில் பயணித்த டேராடூனைச் (Dehradun) சேர்ந்த 40 வயது நோயாளி விஷால் பாண்டே, 42 வயது ஓட்டுநர் குர்மீத் மற்றும் அவர்களுடன் பயணித்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், ஆம்புலன்ஸ் மோதியதில் 40 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த 12 வயது சிறுமி மற்றும் மற்றொரு ஆண் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் லக்னோ (Lucknow) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.