மத்தியப் பிரதேசத்தில் இரு தனித்தனி துர்கா சிலை கரைப்பு சம்பவங்களில் 10 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி
மத்தியப் பிரதேசத்தில் வியாழக்கிழமை(02) நடைபெற்ற துர்கா தேவி சிலைகள் கரைப்பின் போது ஏற்பட்ட இரண்டு தனித்தனி விபத்துகளில் 10 குழந்தைகள் உட்பட குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர்.மீட்புப் பணிகள் இன்னும் நடந்து வருகின்றன
முதல் சம்பவத்தில், உஜ்ஜைன் அருகே உள்ள இங்கோரியாவில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் சம்பல்(Chambal) நதியின் மேல் கட்டப்பட்டுள்ள பாலத்தின் மீது நிறுத்தப்பட்டது. அப்போது 12 வயதுச் சிறுவன் திடீரென டிராக்டர் இயந்திரத்தை இயக்கியதால் குழந்தைகளுடன் நிரம்பிய அந்த வாகனம், முன்னோக்கிச் சென்று தண்டவாளத்தை உடைத்து ஆற்றில் விழுந்தது.
உள்ளூர்வாசிகள் 11 குழந்தைகளை மீட்டனர், ஆனால் அவர்களில் இருவர் சிகிச்சையின் போது உயிரிழந்தனர், அதே நேரத்தில் ஒரு குழந்தை மாயமாகியுள்ளது. மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) குழுக்களுடன் இணைந்து காவல்துறையினர் ஆற்றங்கரையில் தேடி வருகின்றனர். பின்னர் ஒரு கிரேன் மூலம் நீரில் மூழ்கிய டிராக்டர் தண்ணீரில் இருந்து மீட்டது.
காண்ட்வா மாவட்டத்தின் பாந்தனா தாலுகாவில் நடந்த ஒரு தனி விபத்தில், அர்த்லா, ஜம்லி கிராமங்களைச் சேர்ந்த ஏறக்குறைய 30 பேர் துர்கை சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க டிராக்டரில் எடுத்துச் சென்றபோது, அந்த டிராக்டர் அருகில் இருந்த ஏரியில் கவிழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிகாரிகள் இதுவரை எட்டு சிறுமிகளின் உடல்கள் உட்பட 11 உடல்களை மீட்டுள்ளனர், அதே நேரத்தில் டைவர்ஸ் குளத்தில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். வாகனம் கவிழ்வதற்கு முன்பு அதிக சுமையுடன் இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இவ்வேளையில், இரு சம்பவங்களிலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில முதல்வர் மோகன் யாதவ் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்குத் தரமான சிகிச்சை வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
இரண்டு சம்பவங்கள் குறித்தும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.





