திருகோணமலை சம்பூரில் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி!
இலங்கை மின்சாரசபை மற்றும் இந்திய தேசிய அனல் மின்சாரக் கூட்டுத்தாபன கூட்டு வர்த்தகக் கம்பனியால் திருகோணமலை சம்பூரில் அமைந்துள்ள சூரிய மின்னுற்பத்தி நிலையத்தைத் தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கு முன்னர் சம்பூர் நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த இடத்திலேயே 135 மெகாவோல்ட் சூரிய மின்னுற்பத்திக் கருத்திட்டத்தை 2 படிமுறைகளாக ஒருங்கிணைந்து நடைமுறைப்படுத்துவதற்காக இந்திய தேசிய அனல் மின்சாரக் கூட்டுத்தாபன கூட்டு வர்த்தகக் கம்பனிக்கும் இலங்கை மின்சார சபைக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இக்கருத்திட்டத்தின் 1 ஆம் கட்டத்தின் கீழ் 42.5 மில்லியன் டொலர்கள் முதலீட்டில் 50 மெகாவோல்ட் சூரிய மின்னுற்பத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், 23.6 மில்லியன் டொலர்கள் மதிப்பீட்டு செலவில் சம்பூரிலிருந்து கப்பல்துறை வரைக்குமான 40 கிலோமீற்றர் தூரம் 220 கிலோவாற்று மின்மாற்று வழியை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
இக்கட்டத்தை 2024 தொடக்கம் 2025 வரையான இரண்டு ஆண்டுகளில் பூர்த்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கருத்திட்டத்தின் 2 ஆம் கட்டம் 72 மில்லியன் டொலர்கள் முதலீட்டின் கீழ் மேலதிக 85 மெகாவோல்ட் இயலளவுடன் கூடிய சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.