லோஸ்லியாவுக்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு
ஆன்லைன் சூதாட்டம் குறித்த விளம்பரங்களில் நடித்து வரும் நடிகைகள் ஷிவானி, லோஸ்லியாவுக்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விடயம் குறித்து சட்டத்தரணி ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் லட்சக்கணக்கான பணத்தை இழந்துடன் ஒரு சிலர் மன விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்டதுடன் இந்த சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கி உள்ளதை அடுத்து இந்த சட்டம் தற்போது தமிழகத்தில் அமலில் உள்ளது.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் விளையாடுபவர்களுக்கு 500 ரூபா அபராதம் மற்றும் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் ஆன்லைன் விளையாட்டுகள் வழங்கும் நிறுவனத்திற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் நடிகைகள் லோஸ்லியா, ஷிவானி நாராயணன் உள்பட ஒரு சிலர் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இது சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சட்டத்தரணி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் ஆன்லைன் சூதாட்ட செயலியை அரசாங்கமே தடை செய்திருக்கும் நிலையில் நடிகைகள் சிலர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்த விளையாட்டுக்கு விளம்பரம் செய்து வருகிறார்கள்.
இது சட்டப்படி குற்றம், அவர்களுக்கு சிறை தண்டனை கிடைக்க கூட வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.