நான் நடிப்பதை யாரும் தடுக்க முடியாது.. விஷால் அதிரடி அறிவிப்பு
தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் இருந்தபோது 12 கோடி ரூபாய் அளவுக்கு பண மோசடி செய்திருப்பதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்ட நிலையில், இன்று நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் ஒரு மனதாக விஷாலுக்கு எதிராக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தயாரிப்பாளர் சங்கம் மூலம் அறிக்கையாக அது வெளியானது.
இந்நிலையில், நடிகர் விஷால் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அதுதொடர்பான விளக்கத்தையும் தனது நிலைப்பாட்டையும் அதிரடியாக அறிவித்துள்ளார்.
மேலும், சினிமாவில் இருந்து தன்னை யாரும் ஒதுக்க முடியாது என்றும் எச்சரித்துள்ளார்.
விஷால் தலைவராக இருந்த சமயத்தில், சங்க நிதியை தவறான முறையில் பயன்படுத்தியிருப்பதாகவும் வரவு – செலவில் சுமார் ரூ.12 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
முறைகேடாக பயன்படுத்திய அந்தத் தொகையை சங்கத்திற்கு திருப்பி கொடுக்க சொல்லியும் விஷால் பதிலளிக்காத காரணத்தால், இனிவரும் காலங்களில் அவரை வைத்து படம் தயாரிக்கவுள்ளவர்கள் சங்கத்தில் கலந்தாலோசித்த பிறகுதான் படத்திற்கான பணிகளை தொடங்க வேண்டும்” எனத் தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது அதற்கு விஷால் விளக்கம் அளித்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத் தலைவராக தான் இருந்தபோது செலவு செய்யப்பட்ட பணம் அனைவரது ஆலோசனைப்படியே கொடுக்கப்பட்டது என்றும் உங்கள் அணியில் இருக்கும் கதிரேசன் என்பவருக்கும் அது நன்றாகவே தெரியும். அந்த பணம் எல்லாம் நலிந்த தயாரிப்பாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்குமே செலவு செய்யப்பட்டது என விஷால் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், உங்களுடைய வேலையை ஒழுங்கா பாருங்க, இரட்டை வரி வசூல் முறை, தியேட்டர் பராமரிப்பு கட்டணம் என ஏகப்பட்ட பிரச்சனைகள் உள்ளன. அதையெல்லாம் ஒழுங்குப்படுத்துங்கள் என விஷால் கூறியுள்ளார். விஷால் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டு தான் இருப்பார். என்னை யாராலும் தடுக்க முடியாது என்றும் உறுதியாக கூறியுள்ளார் விஷால்.