தமிழ்நாட்டில் அதிக லாபம் கொடுத்த படம் என்றால் அது ஜெயிலர் தான்.. அப்ப லியோ???
ஜெயிலர் படத்துக்கு அடுத்த இடத்தில்தான் லியோ திரைப்படம் இருப்பதாக திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்திருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 19ஆம் தேதி வெளியான திரைப்படம் லியோ. விஜய் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்திருந்த லியோ தளபதி ரசிகர்களை ரொம்பவே திருப்திப்படுத்தியிருக்கிறது.
விமர்சன ரீதியாக லியோ பலத்த அடி வாங்கிக்கொண்டிருக்கிறது. அதேசமயம் படம் வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்திருக்கிறார். முதல் வார முடிவில் 461 கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் அதெல்லாம் ஃபேக்கான வசூல் ரிப்போர்ட் என்று சமூக வலைதளங்களில் கூற ஆரம்பித்தனர்.
அதற்கு பதிலடி கொடுத்த லலித்குமார் வசூல் விவகாரத்தில் நான் ஏன் பொய் சொல்ல வேண்டும். உண்மையைத்தான் சொல்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இந்த சூழலில் படத்தின் வெற்றி விழா நாளை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கவிருக்கிறது.
இந்த நிகழ்வில் கண்டிப்பாக இதுவரை ஆன மொத்த வசூலை லலித் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், “தமிழ்நாட்டில் விநியோகஸ்தர்களுக்கு 100 கோடி ரூபாய்வரை ஷேர் கொடுத்து அதிக லாபம் கொடுத்த படம் என்றால் அது ஜெயிலர் திரைப்படம்தான். அதற்கு அடுத்த இடத்தில் லியோ திரைப்படம் இருக்கிறது. இதுவரை எந்த தமிழ்ப்படமும் செய்யாத சாதனையை ஜெயிலர் செய்திருக்கிறது” என்றார்.
முன்னதாக அவர் அளித்திருந்த இன்னொரு பேட்டியில், “லியோ திரைப்படம் எடுப்பதற்காக நான் தான் லலித்குமாருக்கு பணம் கொடுத்தேன். படம் ரிலீஸாகவிருக்கும் சில நாட்களுக்கு முன்புதான் கொடுத்தார்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.