கரீபியன் கடற்கரையில் சுறாவுடன் செல்ஃபி எடுக்க முயன்ற சுற்றுலாப் பயணிக்கு நேர்ந்த கதி!

தனது குடும்பத்தினருடன் பெண் சுற்றுலாப் பயணி ஒருவர், கரீபியன் கடற்கரைக்குச் சென்றுள்ளார். அப்போது, கடற்கரையில் இருந்து சில மீட்டர் தூரத்தில், அதாவது ஆழமற்ற நீரில் நின்றுகொண்டிருந்து படம் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுறா ஒன்றையும் படம் பிடித்துள்ளார். ஆனால், அது அவரைத் தாக்கியது. இந்த தாக்குதலை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. எனினும், அந்தச் சுறா அவருடைய இரு கைகளில் ஒன்றை மணிக்கட்டு வரையிலும், மற்றொன்றிலும் முன்கை வரையும் கடித்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும் தன் மனைவியை சுறா கடிக்காமல் இருக்க அவரது கணவர் கடலில் குதித்து காப்பாற்றி வந்துள்ளார். காயம்பட்ட அந்தப் பெண்ணுக்கு 55 வயது இருக்கலாம் என்றும், அவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அவர் கனடா மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அங்கிருந்தவர்களின் கூற்றுப்படி, அந்த சுறாவின் நீளம் சுமார் 6 அடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த சுறாவின் இனம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. ஆனால், அது ஒரு காளை சுறாவாக இருக்கலாம் எனவும், தாக்குதலை ஏற்படுத்துவதற்கு முன்பு அங்கே ஒரு சுறா சுற்றித் திரிந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், ”இது எவ்வளவு சோகமாக இருந்தாலும், நமது சூழலைக் கவனிப்பதற்கும் விழிப்புடன் இருப்பதற்கும் இது ஒரு எச்சரிக்கைக் கதை” எனப் பதிவிட்டுள்ளார்.