இலங்கையில் அதிக விலைக்கு சீனி விற்கும் வர்த்தகர்களுக்கு ஆபத்து
இலங்கையில் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலைக்கு அதிகமாக சீனியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சீனி கையிருப்பு தொடர்பான புதிய வரி தொகையை கணக்கிட்டு அதிக விலைக்கு சீனி விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியெல்ல தெரிவித்தார்.
வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள விலையை விட அதிகமாக சீனியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நுகர்வோர் அதிகார சபை வழக்குத் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 03 ஆம் திகதி முதல் நுகர்வோர் அதிகாரசபையானது சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தலை 80/8 ஆணை இலக்கத்தின் கீழ் நிர்ணயித்ததுடன், அதில் பொதி செய்யப்படாத வெள்ளை சீனி கிலோ ஒன்றுக்கு 275 ரூபாவும் பொதி செய்யப்பட்ட ஒரு கிலோவிற்கு 295 ரூபாவும் அதிகபட்ச சில்லறை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொதி செய்யப்படாத பிரவுன் சீனி 330 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்ட பிரவுன் சீனி கிலோ ஒன்றின் விலை 350 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.