Site icon Tamil News

தமிழ் MPக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு – கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சந்திப்பு இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.இரு தரப்பினருக்கும் இடையில் கடந்த மே மாதம் நடந்த பேச்சுக்களில் எந்தவித முன்னேற்றகரமான நகர்வுகளும் இடம்பெறாத நிலையில் இன்றைய பேச்சுக்கு ஜனாதிபதியால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மே மாதத்தில் இரு நாட்கள் பேச்சு நடந்தது. முதல் நாளில் காணி விடுவிப்பு, தொல்லியல் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை போன்ற விடயங்கள் ஆராயப்பட்டபோதும் , இதுவரையில் அவற்றில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.

காணி விடுவிப்புத் தொடர்ப்பில் அவசர அவசரமாகக் கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க தலைமையில் கூடிய கூட்டத்தில் விடுவிக்கப்படக்கூடிய காணிகளை அடையாளப்படுத்த புதிய ஒரு குழுவை நியமிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

அதேநேரம், தொல்லியல் திணைக்களத்தின் காணி ஆக்கிரமிப்புத் தொடர்பில் ஜனாதிபதி உத்தரவிட்டபோதும் அது தொடர்பான இறுதி முடிவு எதனையும் தாம் எடுக்கவில்லை என்று திணைக்களத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.இந்தநிலையிலேயே இன்றைய சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் , சந்திப்பில் அரசியல் தீர்வு தொடர்பில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version