தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட முத்துராஜா பற்றிய புதிய தகவல்
இலங்கையில் இருந்து தாய்நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்ட “முத்துராஜா” யானைக்கு மருத்துவ சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட “முத்துராஜா” யானை 22 வருடங்களின் பின்னர் கடந்த இரண்டாம் திகதி தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
நேற்று மதியம் தாய்லாந்தில் உள்ள சியாங் மாய் விமான நிலையத்திற்கு சுமார் ஒரு மணி நேர விமான பயணத்திற்கு பிறகு முத்துராஜா சென்றடைந்தது.
இதையடுத்து அந்த யானை தாய்லாந்தின் லாம்பாங்கில் உள்ள யானைகள் தடுப்பு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
“முத்துராஜா” என்ற யானை இன்று குளிப்பதற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அதன் பின்னர் கால்நடை வைத்தியர் யானையின் உடலில் உள்ள வெளிப்புற காயங்களை பரிசோதித்ததாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
முத்துராஜாவின் இடது முன் காலை வளைக்க முடியாத நிலையிலும் கவனம் செலுத்தியுள்ளனர்.
எதிர்பார்த்தது போலவே யானைக்கு மிகுந்த கவனத்துடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முத்துராஜா 30 நாட்களுக்கு அந்நாட்டின் விலங்கு தொற்றுநோய் கட்டுப்பாட்டு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் யானைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனைக்கு மாற்றப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய முத்துராஜா தனது சொந்த நாட்டில் சுதந்திரமாக இருக்கும் படங்கள் இன்று வெளிநாட்டு ஊடகங்களில் வெளியாகின.
இதேவேளை, சன்னஸ்பத்கள் ஊடாக ஆலயங்களுக்கு யானைகளை நன்கொடையாக வழங்குவது நிறுத்தப்பட வேண்டுமென சுரகிமு லங்கா அமைப்பு தெரிவித்துள்ளது.