இந்தியாவை அடுத்து அரிசி ஏற்றுமதியை தடை செய்த மத்திய கிழக்கு நாடு..
பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா திடீரென்று தடை விதித்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகமும் அரிசி ஏற்றுமதி மற்றும் மறு ஏற்றுமதியை நான்கு மாதங்களுக்கு தடை செய்துள்ளது.
குறித்த தடை விதிப்பில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகளும் பொருந்தும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த தடையானது பழுப்பு அரிசி, முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அரைக்கப்பட்ட அரிசி மற்றும் உடைந்த அரிசி உட்பட அனைத்து வகையான அரிசிகளுக்கும் பொருந்தும் எனவும் அக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது..
அத்துடன் அரிசியை ஏற்றுமதி செய்ய அல்லது மறு ஏற்றுமதி செய்ய விரும்பும் நிறுவனங்கள், நாட்டிற்கு வெளியே ஏற்றுமதி அனுமதி பெற பொருளாதார அமைச்சகத்திடம் கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
கடுமையான விலை உயர்வுக்கு மத்தியில் பாஸ்மதி அல்லாத வெள்ளை மற்றும் உடைந்த அரிசியின் ஏற்றுமதியை தடை செய்வதற்கு இந்திய அரசாங்கம் கடந்த வாரம் எடுத்த முடிவைத் தொடர்ந்து ஐக்கிய அமீரக நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.
மேலும், இந்த தடை உத்தரவானது தற்காலிகமாக இருந்தாலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள உள்ளூர் விநியோகஸ்தர்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் அரிசி விலை உயரும் என்று எதிர்பார்க்கின்றனர்.
உலக அரிசி ஏற்றுமதியில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பங்கை இந்தியா கொண்டுள்ளது. மட்டுமின்றி, எண்ணெய் நீக்கப்பட்ட அரிசி தவிடு ஏற்றுமதியை நவம்பர் 30 வரை கட்டுப்படுத்தவும் வெள்ளிக்கிழமை இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.