இலங்கை ரூபாய்க்கு நிகரான டொலரின் பெறுமதியில் அதிகரிப்பு – அரசாங்கம் விளக்கம்
டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு தொடர்பில் அச்சமடைய தேவையில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.
தேவைக்கும் வழங்கலுக்கும் இடையிலான வேறுபாடுகளினால் டொலரின் பெறுமதியில் ஏற்ற இறக்கம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகளின் நாணய மாற்று விகிதங்களின்படி, ரூபாவின் பெறுமதி நேற்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதற்கமைய, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 335 ரூபாவாக பதிவாகியுள்ளது. கொள்முதல் விலை 331 ரூபாவாக காணப்பட்டது.
ஆனால் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 318.99 ரூபாயாக காணப்பட்ட அதேவேளை, கொள்வனவு விலை 303.19 ரூபாயாக பதிவாகியுள்ளது.