கியூபாவில் 4 ஆண்டுகளாக இயங்கும் சீன உளவு நிலையம் – அமெரிக்கா தகவல்
அமெரிக்கா-சீனா இடையிலான உறவு நீண்ட காலமாக மோதல் போக்கிலேயே இருந்து வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம், அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்றவுடனே, உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்த சீனா மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து ஜோ பைடனின் தேசிய பாதுகாப்பு குழுவிடம் அமெரிக்க உளவு அமைப்புகள் எடுத்துக்கூறின.
கடந்த ஆண்டு, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தைவானுக்கு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சென்றார். அதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில், அமெரிக்க வான்பகுதிக்குள் நுழைந்த சீன உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. அதனால் சீனாவுக்கு செல்வதாக இருந்த அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் பயணம் ரத்து செய்யப்பட்டது.
கடந்த மாதம், தைவான் ஜனாதிபதி, அமெரிக்கா சென்றதற்கும் சீனா எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், கியூபாவில் சீனா உளவு நிலையம் அமைத்துள்ளதாக அமெரிக்கா உறுதி செய்துள்ளது. வெளிப்படையாக கருத்து சொல்ல அதிகாரம் இல்லாத ஒரு அதிகாரி இதை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, உலகம் முழுவதும் உளவு தகவல்களை சேகரிக்கும் திறனை மேம்படுத்த சீனா முயன்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கியூபாவில், மின்னணு ஒட்டுகேட்பு நிலையம் அமைத்துள்ளது. 2019ம் ஆண்டில் இருந்து இந்த நிலையம் இயங்கி வருகிறது. இதை அமெரிக்க உளவு அமைப்புகள் உறுதி செய்துள்ளன. இதற்கு ஈடாக நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் கியூபாவுக்கு பல லட்சம் டாலர் அளிக்க சீனா முன்வந்துள்ளது என்று அவர் கூறினார்.
அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையிலும் இத்தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது துல்லியமான தகவல் அல்ல என்று வெள்ளை மாளிகை மறுத்துள்ளது. கியூபா துணை வெளியுறவு மந்திரி கர்லோஸ் பெர்னாண்டஸ் டி காஸ்சோவும் மறுத்துள்ளார்.