விஜய் கட்சியின் கொடிக்கு எதிர்ப்பு? யானை சின்னத்தை நீக்க கோரி புகார்?
நடிகர் விஜய் இன்று அறிமுகப்படுத்திய தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னம் இடம் பெற்றுள்ளதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
தேசியக் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம் யானை. ஆகையால் விஜய் கட்சியில் யானை சின்னம் இடம் பெறக் கூடாது, நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு கொடுப்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் விஜய் தாம் அரசியலுக்கு வருவதாகவும் தமிழக வெற்றி கழகம் என்கிற கட்சியைத் தொடங்குவதாகவும் அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்றுதான் இருக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் கட்சியின் பெயரில் திருத்தம் செய்யப்பட்டது.
அத்துடன் ஆங்கிலத்தில் TVK என நடிகர் விஜய் கட்சி அழைக்கப்படுகிறது. ஆனால் பண்ருட்டி வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சி TVK என அடையாளப்படுத்தப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டது. இதனால் ஆங்கிலத்தில் விஜய் கட்சியை TVK என அழைக்கவும் எதிர்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் இன்று நடிகர் விஜய் தமது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். இந்த கொடியில் 2 யானைகள், வாகை மலர் ஆகியவை இடம் பெற்றுள்ளன. விஜய் கட்சிக் கொடியின் யானைகள் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள், மீம்ஸ்கள் வலம் வருகின்றன.
தற்போது விஜய் கட்சி கொடியில் இடம் பெற்றுள்ள யானைக்கு பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகளில் ஒன்று பகுஜன் சமாஜ் கட்சி.
இதன் தேர்தல் சின்னம் யானை. ஆகையால் பகுஜன் சமாஜ் கட்சியின் யானை சின்னத்தை விஜய் தமது கட்சிக் கொடியில் பயன்படுத்த முடியாது. இருப்பினும் விஜய் கட்சிக் கொடியில் யானை சின்னம் இடம் பெற்றுள்ளதால் அதனை நீக்கியாக வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி புகார் மனு கொடுக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.