ஆஸ்திரேலியா விதித்துள்ள தடை ; சமூக ஊடக நிறுவனங்கள் கண்டனம்
ஆஸ்திரேலியா, 16 வயதுக்குக்கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகத்தைப் பயன்படுத்தத் தடை விதித்திருப்பதை அடுத்து, சமூக ஊடக நிறுவனங்கள் அந்தச் சட்டத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஐக்கிய நாட்டுக் குழந்தைகள் நிதியமான ‘யுனிசெஃப் ஆஸ்திரேலியா’வும் அவற்றுடன் சேர்ந்துகொண்டுள்ளது. அந்தச் சட்டம் இணையத் தீங்குகளுக்கு எதிரான தீர்வு அல்ல என்று அது எச்சரித்தது. அது, இணையத்தில் பிள்ளைகளை ஒழுங்குமுறைக் கட்டுப்பாடற்ற தளங்களுக்குத் தள்ளிவிடக்கூடும் என்றும் அது கூறியது.
அந்தச் சட்டம் மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டாலும் அதனை மேற்கொள்வது சரியானது என்று பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் கூறினார்.
நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்ட ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், ‘எக்ஸ்’ போன்ற தளங்களில் செய்யப்பட்ட சோதனை, இளம் அஸ்திரேலியர்களுக்கு மேம்பட்ட விளைவுகளுக்கும் குறைவான தீங்கிற்கும் இட்டுச்செல்லும் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் சமூகப் பொறுப்புணர்வு தளங்களுக்கு உண்டு என்றார் அவர்.“எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு என்பதே, ஆஸ்திரேலிய பெற்றோருக்கு நாங்கள் கொடுக்கும் செய்தி,” என்று ஆஸ்திரேலியப் பிரதமர் கூறினார்.
அந்தச் சட்டத்திற்கு இணங்காத சமூக ஊடக நிறுவனங்கள் $50 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர் வரையிலான அபராதத்தைச் செலுத்த நேரிடும்.
இந்நிலையில், சட்டம் குறித்து ஏமாற்றமடைவதாக டிக்டாக் கூறியுள்ளது. மனநலச் சுகாதாரம், இணையப் பாதுகாப்பு, தடைக்கு எதிர்ப்பு தெரிவித்த இளம் நிபுணர்களை ஆஸ்திரேலிய அரசாங்கம் புறக்கணித்துள்ளதாக அது சாடியது.
ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் உரிமையாளரான ‘மெட்டா’, விதிமுறைகள் குறித்து கலந்தாலோசனை நடத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளது.
பெற்றோர், பதின்மவயதினர் ஆகியோர் மீது அதிகச் சுமை ஏற்படாத வகையில் தொழில்நுட்ப ரீதியிலான முடிவு எட்டப்படுவதை உறுதிசெய்வதே அந்தக் கலந்தாலோசனையின் நோக்கம்.இதற்கிடையே, ஆஸ்திரேலியச் சட்டம் குறித்து முக்கிய அக்கறைகளை முன்வைத்திருப்பதாக ‘ஸ்னேப்சேட்’ பேச்சாளர் கூறினார். அது எவ்வாறு சாத்தியமாகும் என்பது குறித்து பல பதில் அளிக்கப்படாத கேள்விகள் இருப்பதையும் அவர் சுட்டினார்.