டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சிறப்பு குழு
கம்பஹா மாவட்டத்தில் பரவி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக விசேட குழுவொன்றை நாளை (08) கம்பஹா மாவட்டத்திற்கு அனுப்ப சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் திரு.கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
நிலைமையை கட்டுப்படுத்த உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க விசேட குழுவொன்றை களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, நாட்டில் பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தலைமையில் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மேல்மாகாணத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக செயலணியொன்று ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண ஆளுநர் மார்ஷல் ஆஃப் தி எயார்ஃபோர்ஸ் ரொஷான் குணதிலக்க தெரிவித்துள்ளார்.
மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலை வளாகங்களில் டெங்கு நுளம்புகள் பரவுவதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிபர்களுக்கு நாளை சுற்று நிருபம் வெளியிடவுள்ளதாக மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் ஸ்ரீ லால் நோனிஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 15 மாவட்டங்கள் டெங்கு அபாய மாவட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலைமை தொடர்பில் உடனடி கவனம் செலுத்தப்படாவிட்டால் டெங்கு நோய் பரவல் மேலும் அதிகரிக்கலாம் என அதன் தேசிய அமைப்பாளர் திஸ்னக திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.