செய்தி தமிழ்நாடு

விமான விபத்தில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மேஜர் ஜெயந்த் உயிரிழப்பு

அருணாசலபிரதேசத்தின் வெஸ்ட் காமெங் மாவட்டத்தில் அமைந்திருக்கும் தேஷ்பூர் மிசாமரி ராணுவ முகாமிலிருந்து ராணுவ பணி நிமித்தம் சீட்டா என்ற ராணுவ ஹெலிகாப்டரில் நேற்று காலை லெப்டினன்ட் கர்னல் வினய் பானு ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்த் ஆகியோர் புறப்பட்டுச் சென்றனர்.

இந்த ஹெலிகாப்டரின் ரேடார் சிக்னல் காலை 9.15 மணியளவில் துண்டிக்கப்பட்டதை அடுத்து இந்திய ராணுவம், சேவைகள் வாரியப் படை, இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படையினர் மற்றும் அருணாசலப்பிரதேச காவல்படையினர் ஆகியோர் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதனையடுத்து வெஸ்ட் காமெங் மாவட்டத்திற்கு உட்பட்ட டிர்ராங் அருகிலுள்ள மண்டாலா என்ற இடத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளாகியிருந்தது கண்டறியப்பட்டது.

இந்த விபத்தில் இரண்டு ராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

மேஜர் ஜெயந்த் (வயது 33) தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள ஜெயமங்கலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

மதுரை மகபூப்பாளையத்திலுள்ள செவன்த் டே அட்வெண்டிஸ்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பயின்றவர்.

மதுரை விமான நிலையத்தின் அருகே அமைந்துள்ள சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் 2006-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு இளம் கணினி அறிவியல் பயின்றார்.

தேசிய மாணவர் படை ராணுவ பிரிவில் பயிற்சி பெற்று பல்வேறு நிலைகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று அண்டர் ஆபிஸர் எனும் ரேங்கிங் அடிப்படையில் சி சான்றிதழ் பெற்றவராவார்.

இதனையடுத்து சென்னையில் உள்ள ஆபிஸர்ஸ் பயிற்சி மையத்தின் வாயிலாக தேர்வாகி கடந்த 2010ஆம் ஆண்டு இந்திய ராணுவப் பணியில் இணைத்துக் கொண்டார்.

இந்திய ராணுவத்தின் மேஜர் பொறுப்பிலிருந்தாலும் தான் விடுமுறையில் வரும்போதெல்லாம் தனது கல்லூரிக்குச் சென்று நண்பர்களையும் பேராசிரியர்களையும் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

மேலும் தனது கல்லூரியின் என்சிசி மாணவ, மாணவியரிடம் ஊக்கமளிக்கும் வகையில் உரையாடி தேசப்பற்றை ஊட்டியவர்.

ராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு இன்னும் இரண்டே ஆண்டுகள் உள்ளநிலையில், தன்னுடைய ஓய்வுக்காலத்திற்குப் பிறகு மதுரை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களை தன்னைப் போன்றே ராணுவத்தின் உயர் பதவியில் அமர வைக்க வேண்டும் என்பது மேஜர் ஜெயந்த்தின் கனவாக இருந்தது என அவரது பேராசிரியர் வீ.காமராசன் தொலைபேசியில் நம்மிடம் பேசினார்.

பேராசிரியர் காமராசன் என்சிசி-யில் மேஜராக இருந்து ஓய்வு பெற்றவர். தற்போது நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள தெரசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றி வருகிறார்.

மேலும் அவர் கூறுகையில், ஜெயந்த்தின் தந்தை ஆறுமுகமும் எங்களது கல்லூரி மாணவர்தான். தாயார் மல்லிகா. அவரும்கூட பட்டதாரிதான். நடுத்தரக்  குடும்பம். ஒரே பையனாக இருந்தபோதும்கூட, உற்றார் உறவினர்களின் எதிர்ப்பையும் மீறி தங்களது மகனை ராணுவத்தில் சேர்த்து தேசத்துக்காகப் பங்காற்றச் செய்வதில் மிகுந்த உறுதியோடு இருந்தனர்.

எனக்கு இரண்டு பையன்கள். ஜெயந்த் எனது 3-ஆவது பையனைப் போன்று எனது குடும்பத்தாரிடம் அன்போடு பழகினார். இப்போதும்கூட எனது மகன்கள் ஜெயந்த்தை அண்ணா என்றே அழைப்பார்கள்.

ஒவ்வொரு முறை விடுமுறைக்கு வரும்போதும் எங்களைப் பார்க்காமல் அவர் சென்றதில்லை. அவரது இறப்பு என்பது தனிப்பட்ட முறையில் எங்களுக்கு மட்டுமன்றி தேசத்திற்கே பேரிழப்புதான் என்றார்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயந்த்துக்கு செல்லா ஸ்ரீஜா என்பவரோடு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் இல்லை.

இந்நிலையில் ஜெயந்த்தின் உடல் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் மதுரை விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டது.ராணுவ வீரரின் உடல் விமான நிலைய இயக்குனரகம் முன்பு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி விஜய் ஆனந்த், மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் உள்ளிட்ட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பிறகு மேஜர் ஜெயந்த்தின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அதிகாலை 5:30 மணி அளவில், அங்கிருந்து ஜெயந்த்தின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள ஜெயமங்கலத்திற்கு அவரின் உடல் கொண்டு செல்லப்பட உள்ளது.

அங்கு உரிய ராணுவ மரியாதையுடன் இன்று காலை 8 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது..

இதற்கிடையே தங்களது ஊரைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் ஜெயந்த் இறந்ததைத் தொடர்ந்து ஜெயமங்கலம் பகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

(Visited 3 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content