கனவுகளை நிஜமாக்க செய்ய வேண்டியது என்ன?
கனவுகள் என்பது வெறும் கற்பனை அல்ல. அவை இல்லாமல் இலட்சியத்தை அடைய சாத்தியம் இல்லை. கனவுகளை நிஜமாக்கி, லட்சியங்களை சாத்தியமாக்கு வதற்கு தேவையான வழிமுறைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஏன் கனவு காண வேண்டும்?
கனவு காணும்போது நிதர்சன உலகை மறந்து நமக்கு சந்தோஷம் அளிக்கக்கூடிய விஷயங்களை நாம் கற்பனை செய்கிறோம். கனவுகளை துரத்தும் போது நாம் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறோம். நேற்றை விட இன்று நாம் சிறந்தவர்களாக மாறியிருப்பதை உணர்கிறோம். வாழ்க்கையில் நிறைய சந்தோஷம் மகிழ்ச்சி வேண்டுமென்றால் கனவு காண வேண்டும். கனவு காண்பதோடு மட்டும் நின்றுவிடாமல் அவை ஆவலுடன் உங்களை துரத்த வேண்டும்.
கனவுகளை நிஜமாக்க செய்ய வேண்டியது என்ன?
கனவுகளைப் பட்டியலிடுங்கள்; முதலில் கனவுகளைப் பட்டியலிடுங்கள். எதையும் விட்டுவிட வேண்டாம். அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் பரவாயில்லை. உங்களுக்கு வாழ்க்கையில் என்ன வேண்டும்? எது உங்களை மகிழ்ச்சிப்படுத்தும்? ஒரு புதிய வேலை, புதிய கார், ஆரோக்கியமாக இருக்க விருப்பமா? உலகைச் சுற்றிவர ஆசையா? உங்களுக்கு மிகப் பிடித்த பிரபலத்தை சந்திக்க வேண்டுமா? இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
கனவுகளைப் பிரித்துக் கொள்ளுங்கள்;
உங்கள் கனவுகளை எழுதி முடித்த பின்பு அதை மூன்று பகுதியாக பிரித்துக் கொள்ளுங்கள். மூன்று மாதங்கள், ஒன்றிலிருந்து ஐந்து வருடங்கள், 5 வருடங்களுக்கு மேற்பட்டவை என்று குறுகிய கால மற்றும் நீண்ட கால கனவுகள் என்று வகைப்படுத்திக் கொள்ளுங்கள். தேவையான திட்டங்களை தீட்டுங்கள். அதற்கான செயல்முறைகளை செயல்படுத்த தொடங்குங்கள் உங்களுடைய கனவுகளை வாழத் தொடங்குங்கள்
மனத்தடையை உடையுங்கள்;
‘’எனக்கு வயதாகிவிட்டது’’ என்றோ ‘’நான் மிக சிறியவன்’’ என்ற எண்ணமோ வேண்டாம். எந்த வயதிலும் கனவு காணத் தொடங்கலாம். வயது ஒரு தடையே அல்ல. அதேபோல நான் ஏழை, பலவீனமானவன், என்ற எண்ணமும் வேண்டாம். இது போன்ற மனத்தடைகளை உடையுங்கள்.
கனவுகளை காட்சிப்படுத்துங்கள்;
பெரிதாக கனவு காணுங்கள். அவற்றைக் காட்சிப்படுத்துங்கள். திட்டங்களை தீட்டி, விருப்பங்கள் நிறைவேற்றி விட்டது போல மனதில் காட்சிகளாக கற்பனை செய்து பார்த்து வாழத் தொடங்குங்கள். கனவுகள் நிறைவேற மிகவும் பயனுள்ள வழி இது.
ஓய்வெடுங்கள்;
அவ்வப்போது ஓய்வெடுங்கள். கனவுகளை துரத்திக் கொண்டு செல்லும்போது மனதும் உடலும் மிகவும் களைப்படைந்து விடும். அவ்வப்போது ஐந்து நிமிட நேரத்துக்காவது செய்யும் வேலை விட்டு விலகி உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஒப்பீடு வேண்டாம்;
பிறருடன் உங்களை ஒப்பிட வேண்டாம். அப்படி ஒப்பிடும்போது அங்கே தேவை இல்லாத விரக்தி வந்து சேரும். ‘நான் தனித்துவமானவன்’ என்ற எண்ணம் மட்டும் மேலோங்கி இருக்கட்டும்.
மனத்தளர்ச்சி வேண்டாம்;
இலட்சியத்தை நோக்கிய பயணத்தில் சின்ன சின்ன தோல்விகள் வருவது சகஜம். அதனால் மனத்தளர்ச்சி வேண்டாம். கனவுகளைப் புதுப்பித்துக் கொண்டு மீண்டும் வெற்றிப் பயணத்தை நோக்கி நடைபோடுங்கள். விரைவில் கனவுகள் நிஜமாகும்.