ரஷ்யத் தலைவரை வரவேற்ற வியட்னாம்; இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்த உறுதி
வியட்னாமில் ஜூன் 20ஆம் திகதி நடைபெற்ற ராணுவச் சடங்கின்போது 21 குண்டு முழக்க மரியாதையுடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் வரவேற்கப்பட்டார்.
மாஸ்கோவுடன் விரிவான உத்திபூர்வ பங்காளித்துவத்துக்குப் பாராட்டுத் தெரிவித்த வியட்னாம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உறுதிதெரிவித்தது.
வியட்னாம் அதிபர் தோ லாம், புட்டின் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்றதற்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். அதோடு, உள்நாட்டு அரசியல் நிலைத்தன்மை உள்ளிட்ட ரஷ்யாவின் சாதனைகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.அவர்கள் இருவரும் ஹனோயில் சந்தித்தனர்.
வியட்னாமுடன் விரிவான உத்திபூர்வ பங்காளித்துவத்தை வலுப்படுத்துவது, ரஷ்யாவின் முன்னுரிமைகளில் ஒன்று எனத் புட்டின் கூறினார்.
தென்கிழக்காசிய நாடுகள் சங்கத்துடன் பேச்சுவார்த்தையை மதிப்பதாக ரஷ்யத் தலைவர் சொன்னார். அதில் வியட்னாம் துடிப்பான பங்கையாற்றுவதாகவும் அவர் சுட்டினார்.
ஜூன் 20ஆம் திகதி வியட்னாமைச் சென்றடைந்த புட்டின், தமது இருநாட்டு ஆசியப் பயணத்தின் இறுதிக் கட்டத்தில் உள்ளார். இதற்கு முன்னர், அவர் வடகொரியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டார்.இந்நிலையில், வியட்னாம் புட்டினுக்கு அளித்த வரவேற்பினால், முக்கியப் பங்காளியான அமெரிக்காவிடமிருந்து குறைகூறல்கள் எழுந்துள்ளன.
2023ஆம் ஆண்டில் ஹனோயுடன் அரசதந்திர உறவுகளை மேம்படுத்திக்கொண்ட அமெரிக்கா, வியட்னாமின் முன்னணி ஏற்றுமதிச் சந்தையாகத் திகழ்கிறது.உக்ரேனில் ரஷ்யப் போரைத் தூண்ட, புட்டினுக்கு எந்தவொரு நாடும் தளம் அமைத்துக்கொடுக்கக் கூடாது என்று இந்த வாரத் தொடக்கத்தில் அமெரிக்கத் தூதரக அறிக்கை ஒன்று கூறியது.