இலங்கையில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுகளுடன் இருவர் கைது!
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒருதொகை சிகரெட் குச்சிகளுடன் இருவர் சுங்க மத்திய புலனாய்வு பிரிவினரால் இன்று (11.09) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் இருந்து கொழும்பிற்கு கொண்டுவரப்பட்ட கொள்கலனை சோதனையிட்ட போதே குறித்த சிகரெட் குச்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட சிகரெட் குச்சிகளின் பெறுமதி 4.5 மில்லியன் இந்திய ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது.(இலங்கை நாணயத்தின்படி 110 மில்லியன் ரூபாய்)
இந்திய சுங்கப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இலங்கை சுங்கப் புலனாய்வுப் பணிப்பாளர்கள் அலுவலகத்திற்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், பருத்தி துணி மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்யும் போர்வையில் குறித்த சிகரெட் குச்சிகளை இறக்குமதி செய்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை இவ்வாறு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் நாட்டிற்கு 316 மில்லியன் ரூபாய் வரி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.